திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிசாலையில் தனியார் உணவு விடுதி அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உணவு விடுதி உரிமையாளரான லிபு என்பவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். திரும்பிய வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உணவு சாப்பிட வருவது போல வந்த ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் தள்ளி சென்று பின்னர் திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர்.
இதற்கிடையே கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை செல்லும் சாலையில் அந்த மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்று பார்த்த போது அது ஹோட்டல் உரிமையாளரான லிபுவின் பைக் என்பது உறுதியானது. மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் பெட்ரோல் தீரும்வரை ஒட்டி விட்டு பின்னர் சாலையோரம் நிறுத்தி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
