அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த 4 எம்.எல்.ஏ-க்களின் செயலை ‘குதிரை பேரம்’ என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். இந்த நான்கு எம்.எல்.ஏ-க்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அண்ணா திமுகவின் தலைமைச் கழகமும், தொண்டர்களும் இரவு என்றும் பகல் என்றும் பாராமல், தங்கள் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அதையெல்லாம் முற்றிலும் மறந்துவிட்டு, தங்களது சுயநலத்திற்காகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு இன்றைக்கு மாற்றுக்கட்சிக்கு ஓடியிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மேடையிலேயே மிக ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். தேர்தல் முடிந்து விரலில் வைக்கப்பட்ட மை கூட இன்னும் அழியாத சூழலில், அதற்குள் இப்படிப்பட்ட துரோகத்தை அரங்கேற்றி விட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கொந்தளித்தார்.

இந்த இயக்கத்திற்குத் துரோகம் விளைவித்த எவரையும் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் ஆத்மா மன்னிக்காது என்றும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகவும் சாடினார். மேலும், இந்த 4 இடங்களுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்றும், அதில் அண்ணா திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டு மக்களின் பேராதரவோடு மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று துரோகிகளுக்கு பாடம் புகட்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி சபதமேற்றுள்ளார்.