தே.மு.தி.க. சார்பில் , ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற தலைப்பில் ரதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, கரூரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் 41 உயிர்கள் சேதமானது குறித்து தனது கடும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் தெரிவித்தார்.
கரூரில் நடந்த நிகழ்வில் மக்கள் உயிரிழந்ததற்குப் பாதுகாப்பு தரத் தவறிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். அதே சமயம், கூட்டத்திற்கு தாமதமாக வந்த விஜய் தவறு செய்தார். ஒரு நடிகராக சூட்டிங்கிற்கு நேரத்திற்கு வரக்கூடியவர், பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏற்கக்கூடியது அல்ல. கடமை உணர்வை தவறியது தப்பு தான்,” என்று விமர்சித்தார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாமல் விட்டனர். விமானத்தில் ஏறி வீடு புகுந்த விஜய், விபத்துக்குப் பிறகு வெளியே வராமல் இருக்கிறார். மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும்; நிதியுதவியையும் நேரில் வழங்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “இந்த விபத்தில் இருபுறமும் தவறு உள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசும் தவறியது. அதேபோல், தொண்டர்களை பாதுகாக்க வேண்டிய கட்சி தலைமையும் தவறு செய்துள்ளது. இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. புஸ்சி ஆனந்த் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தூக்கிலிட போகிறார்களா? நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
அறியாமல் விபத்து நடந்து விட்டதாக நீங்கள் கூறுங்கள். மகாமகம் நடைபெறும் போது விபத்து நடைபெறவில்லையா.? கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லையா.? யாரை கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சிக்கு இந்த முதலமைச்சர் சென்றாரா.? இன்று கரூருக்கு மட்டும் இரவோடு இரவாக தனி விமானத்தில் ஓடோடி செல்கிறார். முதல்வர். இது எல்லாமே அரசியல் தான் என்றார்.
மேலும் , கிருஷ்ணகிரியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலை கழிவுநீர் கலக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இங்கே மக்களுக்கு குடிநீர் கூட சரிவர கிடைப்பதில்லை. கால்நடைகளுக்கே இந்த நீர் பயன்படவில்லை. இந்த நிலை மாற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதுதான் அரசின் கடமை,”எனக்கூறினார்.
