பா.ம.க நிறுவனரும் மூத்த அரசியல்வாதியுமான டாக்டர் எஸ். ராமதாஸ், கடந்த சில வாரங்களாக கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் நிர்வாக ஆலோசனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இதய சம்பந்தமான பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் முதற்கட்ட சோதனைகள் மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (திங்கட்கிழமை) காலை ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அவரின் உடல்நிலை மருத்துவ அணியினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவரது மகனும் பா.ம.க. இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், மருத்துவமனைக்கு சென்று தந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் நேரில் கேட்டு அறிந்தார்.

இந்தநிலையில் , தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, டாக்டர் ராமதாசை நேரில் சந்தித்து அவரது உடல்நலத்தைக் குறித்து நலம் விசாரித்தார். பின்னர், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதலமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.