வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மிகை ஊதியம் பெறத் தகுதியான நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறவுள்ளனர்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மொத்தம் 2,69,439 தொழிலாளர்களுக்காக ரூ.376 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரியங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும். மின்துறையிலும் 20% போனஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும். கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்களுக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.”
