த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக, த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார், சமூக வலைதள பதிவைத் தொடர்புபடுத்தி ஆதவ் அர்ஜூனா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீட்டை அறிவித்தது. அதில் கூடுதலாக, த.வெ.க. சார்பாக ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறப்பட்டது. சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியும், கரூர் மக்களிடையே சோகம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் கரூரை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட தவெக மாவட்ட செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்த கருத்துக்களை அவர் கேட்டு அறிந்துள்ளார். மேலும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும் என நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவவும், சர்ச்சையான பதிவுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.