தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய அமைச்சரவை மற்றும் ஆட்சி உருவாக்க விவகாரங்களால் பரபரப்பின் உச்சிக்கே சென்றுள்ள நிலையில், தவெக அரசு அமைப்பதில் ‘குதிரை பேரம்’ நடந்ததாகக் கிளம்பிய சர்ச்சைகளுக்கு மதிமுக எம்பியான துரை வைகோ அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதிய ஆட்சி அமைந்த விஷயத்தில் தவெக குதிரை பேரம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை; காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதற்காக இந்த ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்று ஏற்கனவே தங்களின் பக்க விளக்கத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்” என்று ஓப்பனாகப் பேசியுள்ளார்.

அதேபோல், அதிமுகவின் ஒரு பிரிவினர் தவெக-வுக்கு ஆதரவு அளித்தது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ள துரை வைகோ, “அதிமுகவினர் ஆதரவு அளித்ததற்கு அவர்களும் உரிய விளக்கம் கொடுத்துள்ளனர்; எனவே, அதிமுக விவகாரத்தை ஒரு குதிரை பேரமாகப் பார்க்க முடியாது, அது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சிப் பிரச்சனை மட்டும்தான்” என்று பட்டவர்த்தனமாகப் பேசியுள்ளார்.

தவெக-வை நோக்கி எதிர்க்கட்சிகள் பாய்ச்சிய ‘குதிரை பேரம்’ என்ற அஸ்திரத்தை, துரை வைகோ தனது ஒற்றைப் பேட்டி மூலம் தவிடுபொடியாக்கியுள்ளது கோட்டை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.