தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அமைச்சரவையில், மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மல்குமார், முதலமைச்சர் விஜய் அவர்களின் அசுரத்தனமான உழைப்பு மற்றும் மக்கள் பணிகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடித் தகவல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், “பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இதுவரை பார்க்காத ஒரு புதிய அரசுத்துறையையும், சுறுசுறுப்பான அமைச்சர்களையும், அர்ப்பணிப்புடன் செயல்படும் முதலமைச்சரையும் இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழ்நாட்டில் பார்ப்பீர்கள்” என்று சவால் விட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் அவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அமைச்சர், “நமது முதல்வர் விஜய் அவர்கள் தினமும் காலை தொடங்கி மாலை வரை ஓயாமல் மக்கள் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்; மதிய உணவைக் கூட கோட்டையில் இருக்கும் தலைமைச் செயலகத்திலேயே சாப்பிட்டுவிட்டுத் தொடர்ந்து கோப்புகளை ஆய்வு செய்து வருகிறார்; இன்னும் ஒரே வருடத்தில் முதல்வரின் இந்த அசாத்திய செயல்பாடுகளின் முழு பலனும் மக்களுக்குத் தெரியும்” என்று நிர்மல்குமார் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த மிரட்டலான பேச்சு தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
