சேலம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். “திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, ஒருமித்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வரலாம்” என அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதன் மூலமே தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதை இந்தப் பேச்சு உணர்த்தியது.

​தொடர்ந்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைக்க நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஈபிஎஸ், “விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பது பாஜகவின் விருப்பம்; அது அவர்களது தனிப்பட்ட கருத்து” என்று சுருக்கமாகக் கூறி கடந்து சென்றார். கூட்டணிக் குறித்து முடிவெடுப்பது அந்தந்த கட்சிகளின் உரிமை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார்.