சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதைச் செய்யத் தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டிய அவர், தற்போது ஒன்றிய அரசு அந்த வேலை நாட்களை 125 ஆக உயர்த்தியுள்ளதைப் பாராட்டக்கூட திமுக அரசுக்கு மனமில்லை என்று சாடினார். மத்திய அரசின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை ஏற்கத் தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

​மேலும், கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் கேஸ் சிலிண்டர் மானியம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக, தற்போது அந்த வாக்குறுதிகள் எங்கே போனது என்று சொல்ல முடியாமல் மக்களை ஏமாற்றி வருவதாக ஈபிஎஸ் தெரிவித்தார். அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தாமல் காலங்கடத்தும் திமுக அரசின் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், சாதாரண மக்களுக்கான திட்டங்களில் அரசியல் செய்வதை விடுத்து உண்மையான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.