விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘ரணபாலி’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ, குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இணையும் இந்த ஜோடிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த வரலாற்றுத் திரைப்படத்தில், விஜய் தேவரகொண்டா ஒரு ஆக்ரோஷமான போராளியாகத் தோன்றுகிறார்.
இந்நிலையில் இயக்குநர் ராகுல் சங்கிருதியன் இயக்கும் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன. வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் நாயகனாக விஜய் தேவரகொண்டா காட்சியளிக்கிறார்.
இது குறிப்பாக, குதிரையில் அமர்ந்தபடி ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை அவர் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லும் காட்சி படத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா ‘ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, புகழ்பெற்ற ‘தி மம்மி’ பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூ வில்லனாக நடிக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 11, 2026 அன்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
