தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்தின் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் அண்மையில் ‘மக்கள் மேடை’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கிய நிலையில், அதற்கு அடுத்த நாளே அண்ணாமலை என்பவரும் புதிய இயக்கம் தொடங்கியதால், “விஜய் முதலமைச்சர் ஆனது பிடிக்காமல் ரஜினிதான் தனது மனைவி மூலமாக இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்; அவருக்கு விஜய் மீது பொறாமை” என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு லதா ரஜினிகாந்த் தற்பொழுது ஒரு நேர்காணலில் அதிரடியாக விளக்கமளித்துள்ளார்.

“மக்கள் மேடை” என்பது மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்காக முன்பே தொடங்கப்பட்ட ஒரு இயக்கம் என்றும், இதில் சாமானியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யார் வேண்டுமானாலும் இணையலாம், ஏன் நாளைக்கு விருப்பப்பட்டால் அண்ணாமலை கூட இதில் இணையலாம் என்றும் கூறிய அவர், நல்ல காரியங்களைச் செய்யும்போது செய்தி வெளியிடாதவர்கள், இப்படி ஒரு சர்ச்சைக்காகக் காத்திருந்து செய்தி வெளியிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தான் செய்யும் காரியங்களைத் தனது கணவரோடு தொடர்புபடுத்தி எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட லதா ரஜினிகாந்த், விஜய் முதல்வரானதால் ரஜினிக்கு பொறாமை என்ற பேச்சுக்கு, “ரஜினி ஏற்கனவே ஒரு பெரிய தலைவர், தலைமைத்துவ பண்பிற்கு அவரே ஒரு ரோல் மாடல்; அவரைப் போய் இப்படிப் பேசுவது பெரிய தவறு, ஒரு சிறு கும்பல் மக்கள் மனதில் விஷத்தை விதைக்க இப்படி வாய் கூசாமல் பேசுவது தமிழ் மரபே இல்லை” என்று மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சனாதன தர்மம் குறித்துப் பேசிய அவர், சனாதனம் என்பது எல்லாரையும் மதிக்க வேண்டும் என்பதுதான் என்றும், அவரவர் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கும் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும், தான் சிறுவயதில் எல்லாரோடும் ஒரு குடும்பமாக வாழ்ந்த சகிப்புத்தன்மை கொண்ட தமிழகத்தையே பார்த்துள்ளதாகவும் தனது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.