தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்த திமுக பெண் நிர்வாகி ஒருவர், தன் தலைவரைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு ஓவெனக் கதறி அழத் தொடங்கினார். “உலகமே பாராட்ற தலைவருயா.. அவரு தோத்துருக்கவே கூடாதுயா.. எங்களால இந்தத் தோல்விய ஜீரணிக்க முடியலயே” என்று அவர் அழுதுகொண்டே முழக்கமிட்டது அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது.

​தேர்தல் தோல்வியின் வலியிலும் தன் தலைவர் மீது அவர் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்திய இந்த விதம், அறிவாலயத்தில் இருந்த மற்ற உடன்பிறப்புகளின் கண்களையும் குளமாக்கியது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சக திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்தப் பெண் நிர்வாகிக்கு அருகில் சென்று, அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றி அமைதிப்படுத்தினர். இந்த உருக்கமான காட்சி தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.