“தமிழகத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதலமைச்சராகிவிட்டார் என்பதற்காக, என்னையும் அவருடன் ஒப்பிட்டு ஆந்திராவில் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறுவது தவறானது” என ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியைத் தொடங்கிப் பல ஆண்டுகளாக ஆந்திர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் என்டிஏ (NDA) கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கிடையே, அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புதுவிதமான அழுத்தங்கள் வரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து ஜனசேனா கட்சியின் தலைமையகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய பவன் கல்யாண் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி, தம்பி விஜய் முதலமைச்சரானதில் இருந்தே மக்கள் என் மீது கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி, தனித்துப் போட்டியிட்டு முதலமைச்சராகிவிட்டார். உங்களது ஜனசேனா கட்சியும் ஆந்திராவில் தனித்துப் போட்டியிட்டு, நீங்களும் முதல்வர் ஆகியிருக்க வேண்டும் என்று பலரும் எனக்குத் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு தெலுங்கு பழமொழியைப் போல, அடுத்த வீட்டுத் திருமணத்திற்காக அந்த வீட்டுக்குச் சம்மந்தமே இல்லாத சிறுவர், சிறுமிகள் உற்சாகமடைவதைப் போல இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டவை.
கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான் ஆந்திராவில் தனித்துப் போட்டியிட்ட போது இதே மக்கள் எனக்கு என்ன செய்தார்கள்? அப்போது என்னை யாரும் ஆதரிக்கவில்லை, அமைச்சர்கள் உட்பட யாரும் கூட என்னுடன் வந்து நிற்கவில்லை. தேர்தல் வியூகங்கள் என்பவை அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்பவே வகுக்கப்படும் என்றார். மேலும் தமிழக முதல்வர் விஜய்யின் அசாத்திய வெற்றியைக் குறிப்பிட்டு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தற்போதைய அரசியல் எதார்த்தங்களைப் பேசியிருப்பது இரு மாநில அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
