தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய நான்கு முக்கியக் கட்சிகளுமே தங்களது ஆதரவைக் கோரிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வணிகர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஒரு மனுவாக இந்தக் கட்சிகளிடம் வழங்கியுள்ளதாகவும், யார் எங்களது கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்த முன்வருகிறார்களோ, அவர்களுக்கே வரும் தேர்தலில் ஒட்டுமொத்த வணிகர்களின் ஆதரவு இருக்கும் என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். தற்போது அனைத்துக் கட்சிகளும் கதவைத் தட்டும் நிலையில், “ஆதரவு யாருக்கு?” என்ற ரகசியத்தை இப்போதே உடைக்கப் போவதில்லை என்றும் விக்கிரமராஜா தெளிவுபடுத்தியுள்ளார்.

தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே வணிகர் சங்கத்தின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். லட்சக்கணக்கான வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் வணிகர்களின் இந்த “வெயிட்டிங்” மூவ், கூட்டணி கணக்குகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.