2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, வரும் தேர்தலில் அதிமுகவுக்குத் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த ஆதரவு முடிவைத் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அவர் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதி என்றும் கதிரவன் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இருந்த பார்வர்டு பிளாக், தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கும் தனது விசுவாசத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட இந்தக் கட்சியின் ஆதரவு, அதிமுக-வின் ‘மெகா கூட்டணி’ முயற்சிக்கு ஒரு பலமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையப் பாடுபடுவோம் என கதிரவன் கூறியிருப்பது, அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதாகவும், அது அதிமுக-வை அரியணையில் அமர்த்தும் என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.