நடிகர் விஜய்யின் முன்னாள் மேனேஜரும், தற்போதைய திமுக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளருமான பி.டி. செல்வகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று விருப்பமனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது ‘கலப்பை மக்கள் இயக்கம்’ மூலம் கன்னியாகுமரி பகுதியில் பல நலத்திட்டங்களைச் செய்துள்ளதாகவும், அங்கு தமக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், திமுக தலைமை உத்தரவிட்டால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அவரைத் தோற்கடிப்பதற்கான தேர்தல் யுக்திகள் தமக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் அதிரடியாகக் கூறினார்.

தவெக தலைவர் விஜய் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பி.டி. செல்வகுமார், விஜய் சொகுசான வாழ்க்கை வாழ்பவர் என்றும், அவரால் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சாடினார்.

15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் விஜய், மக்களை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்பதில்லை என்றும், கடினமாக உழைக்க அவருக்குப் பிடிக்காது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசியலில் விஜய்யின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டு வரும் சூழலில், அவருடன் நெருக்கமாக இருந்த பி.டி. செல்வகுமாரின் இந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.