தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தை பாஜக புறக்கணித்த நிலையில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து ‘மதிப்பெண் அட்டை’ ஒன்றை அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதில் அந்த அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதாகக் கூறி ‘ஆல் ஃபெயில்’ என்ற ரிப்போர்ட்டை அவர் தாக்கல் செய்துள்ளார்.
எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாததால், பழைய அறிவிப்புகளையே அமைச்சர்கள் மீண்டும் கூறி வருவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய அம்சங்களில் திமுக அரசுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஊழல் என்ற பகுதிக்கு மட்டும் ‘சரி’ என்று குறியிட்டு, ஒட்டுமொத்தமாக 10-க்கு 1 மதிப்பெண் என பாஜக குறிப்பிட்டுள்ளது. சட்டப்பேரவையை விளம்பரப் பலகையாக மட்டுமே திமுக பயன்படுத்துவதாகவும், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
