திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாகக் குறிப்பிட்ட திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் மற்றவர்களின் பேச்சைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை ஒரு கூட்டணியாகப் பார்க்காமல், பாஜகவின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிரான கருத்தாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது, நடிகர் விஜய்க்கு பாஜக திட்டமிட்டுத் தரும் அழுத்தமாகவே தெரிகிறது என்று குற்றம் சாட்டினார். இப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தணிக்கை வாரியத்தைக் கொண்டு அரசியல் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கண்டனம் தெரிவித்தார்.