மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலப் பணிகளைத் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது வழக்கமான அதிரடி பாணியில் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, சமீபத்தில் முதல்வரின் கார் டயர் பஞ்சரான சம்பவத்தை முருகப் பெருமானின் அருளோடு ஒப்பிட்டு அவர் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. “முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம்; அதனால்தான் முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ என்னவோ?” என்று செல்லூர் ராஜூ கிண்டலாகக் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தெய்வீக சக்தியையும் அரசியலையும் இணைத்துத் தொடுத்த இந்தத் தாக்குதல் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர்த் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், சரியாக வேலையை முடிக்காமல் அவசரகதியில் திறந்ததால் குழாய்கள் வெடித்துச் சிதறுவதாகவும் அவர் சாடினார். “4 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்த பணத்தை தேர்தலுக்கு இறக்கினாலும் திமுக ஜெயிக்க முடியாது” என்று கூறிய அவர், கூட்டணி பலத்தில்தான் ஸ்டாலின் இருக்கிறார் என்றும், ஜெயலலிதாவைப் போல தனித்துப் போட்டியிட முதல்வருக்குத் தைரியம் இருக்கிறதா என்றும் சவால் விடுத்தார். மேலும், விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் அமித்ஷா போன்ற பெரிய தலைவர்கள் தலையிட மாட்டார்கள் என்றும், இந்தப் படத்தில் அரசியல் சாயம் பூசப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
