திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை முன்வைத்து, மதவெறி அரசியலை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திருமாவளவன், திருப்பரங்குன்றம் விவகாரம் தன்னிச்சையாக உருவான ஒன்றல்ல என்றும், இது ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டே உருவாக்கும் மதச்சார்ந்த அரசியலின் ஒரு பகுதியாகும் என்றும் குற்றம்சாட்டினார். எப்படியாவது தமிழ்நாட்டில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என அவர் கூறினார்.

பாஜகவின் அரசியல் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வெற்றி பெறக்கூடும்; ஆனால் தமிழ்நாடு தனித்துவமான அரசியல் மரபைக் கொண்ட மாநிலம். இங்கு பாஜகவின் முயற்சிகள் பலிக்காது என்றும், எந்த வடிவத்தில் வந்தாலும் பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், திமுகவை ‘தீய சக்தி’ என நடிகர் விஜய் விமர்சித்ததை குறிப்பிட்டு, திமுகவை அழிப்பது அவரது விருப்பமெனில் அதற்கு விசிக எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்றார். விஜய் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாகவும், அதன் வழியாக பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளையும் அழிக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

விஜய் நேரடியாக ஆட்சியைப் பிடிக்க முயல்வது அரசியல் புரிதல் இல்லாத செயல் என்றும், தனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் விஜயின் பின்னால் சென்றிருப்பேன் என்றும் திருமாவளவன் கூறினார். விசிகக்கு சீட்டுகள் முக்கியமல்ல; கொள்கைகளே முதன்மை என அவர் வலியுறுத்தினார்.

மேலும், விஜயும், சீமானும் பாஜக பாஜக பெற்றடுத்த பிள்ளைகள் என்றும், பிரபாகரன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சிகளை சீமான் கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழ் தேசியம் என்ற பெயரில் அரசியல் விமர்சனம் செய்வதில் பிரச்சினையில்லை; ஆனால் பார்ப்பனிய அரசியலால் திராவிட இயக்கங்களை வீழ்த்த முயன்றால், அதனை விசிக அனுமதிக்காது என அவர் எச்சரித்தார்.

திமுகவை விசிக விமர்சித்த சந்தர்ப்பங்களும் உண்டு; ஆனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் இந்த நேரத்தில், திமுகவுடன் இணைந்து எதிர்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் விளக்கினார். விசிக பேசும் அரசியல், சமூகநீதிப் பாதை திமுகவும் ஏற்றுக்கொள்வதால், அந்த கூட்டணியில் தாம் உறுதியாக இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இடம் கிடைக்குமா, ஓட்டு வரும் இல்லையா என்பதெல்லாம் தமக்கு கவலை இல்லை என்றும், நாளையே தன்னை வைத்திருப்பது தேவையில்லை என திமுக கருதினாலும் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.