தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கின.
இதில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (இன்று) நிறைவடைந்துள்ளன.
அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறை, ஜனவரி 4-ஆம் தேதி வரை, மொத்தம் 12 நாட்கள் வழங்கப்படுகிறது. விடுமுறை முடிந்த பிறகு, ஜனவரி 5-ஆம் தேதி (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே நேரத்தில், இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட கலைத் துறைகளில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், விடுமுறை நாட்களை பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில், அவற்றை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
