எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்கி வருகிறது. ‘திராவிட மாடல்’ என்ற சொல் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு எரிந்தாலும், நாம் திராவிட மாடல் என்ற சொல்லை தொடர்ந்து உச்சரிப்போம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “திராவிடம் என்றாலே ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்கு கசப்பாக இருக்கிறது. ஒருகாலத்தில் நீதிக்கட்சியை முற்றாக அழித்து விடுவேன் என சிலர் கூறினர். ஆனால், 100 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதிக்கட்சியின் நீட்சியாக, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திராவிட இயக்கம் தொடர்ந்து பயணித்து வருகிறது” என்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தும் கருத்தியலை தன்னகத்தே கொண்டிருப்பதாலேயே, திராவிட இயக்கம் ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் எரிச்சலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழ்நாட்டில் அறிவுத் தீ அணையாமல் எரிந்துகொண்டிருப்பதால்தான், இங்கு கலவரத் தீயை யாராலும் ஏற்ற முடியவில்லை” என்றார்.

இளைஞர்களை நோக்கி உரையாற்றிய முதல்வர், வாசிப்பும் வளர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை எனக் குறிப்பிட்டார். “30 விநாடி ரீல் வீடியோவையே முழுமையாக பார்க்க முடியாத அளவுக்கு அடிக்‌ஷன் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். நல்ல விஷயங்களுக்கு நேரம் தேவை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் “எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார்.