வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ள முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கட்சி, தற்போது ஒரு மூழ்கும் கப்பலில் கேப்டனாகச் சென்றுள்ளது” என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
மேலும் தமிழக அரசியலில் நேர்மை, நாணயம் மற்றும் மக்களுக்கான பாதுகாப்பை முன்னிறுத்திய கேப்டன் விஜயகாந்தின் தொண்டர்களை, இத்தகைய ஒரு பலவீனமான கூட்டணியில் அமர வைத்திருப்பது தமக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். தி.மு.க கூட்டணி வலுவிழந்து வருவதாகவும், அந்தத் கூட்டணியில் இணைந்திருக்கும் பிரேமலதா விஜயகாந்துக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழிசை கூறினார்.
இதனால் கேப்டன் என்ற அடையாளத்தோடு கம்பீரமாகத் திகழ்ந்த ஒரு கட்சி, இன்று தி.மு.க எனும் மூழ்கும் கப்பலில் பயணிப்பது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
