தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் மிகத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், 234 தொகுதிகளுக்கும் தலா மூன்று வேட்பாளர்கள் கொண்ட உத்தேசப் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும், இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என சுமார் 80 சதவீதம் பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு மற்றும் களப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் த.வெ.க-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தனது தேர்தல் பரப்புரையை அதிரடியாகத் தொடங்கியுள்ளார்.

மேலும் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், கட்சியின் சின்னமான ‘விசில்’ மற்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே செங்கோட்டையன் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோபி தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதையே காட்டுகிறது.