இந்திய ராணுவம் தனது பாரம்பரிய உடைக் கட்டுப்பாடுகளில் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் “ராணுவ சீருடைகள்-2026” (Army Uniforms-2026) என்ற புதிய 174 பக்கங்கள் கொண்ட வழிகாட்டுதல் கையேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது, இது தற்பொழுது சோசியல் மீடியாவில் மாபெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்து அடையாளங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை ஒழித்து, முற்றிலும் இந்தியக் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, ராணுவ அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ உடைகளில் மூடிய கழுத்தைக் கொண்ட பாரம்பரிய ‘பண்டி ஜாக்கெட்’ (Bandi jacket) இணைக்கப்பட்டுள்ள அதே வேளையில், ஆங்கிலேயர் காலத்து அடையாளங்களான அணிவகுப்பு வாள்கள் மற்றும் கௌரவ பெல்ட்டுகள் (Pouch belts) போன்ற பல விஷயங்கள் இனி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தரப்பு ராணுவ வீரர்களுக்கும் ‘டிரெஸ் 3பி’ (Dress 3B) என்ற புதிய குளிர்காலப் போர் சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் காக்கும் நோக்கில், ராணுவ உடையில் இருக்கும்போது பச்சை குத்துதல் (Tattoos), காது-மூக்கு குத்துதல், வாசனை திரவியங்கள் (Perfumes) மற்றும் கைகளில் காப்பு, பிரேஸ்லெட் அணிவது போன்றவற்றுக்குத் தடை நீடிப்பதோடு, மீசையின் நீளம் 12 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதியும் கடைப்பிடிக்கப்படும்.
அதேபோல் பெண் ராணுவ அதிகாரிகளுக்குச் சோபர் நிற புடவைகள் மற்றும் குர்தா-சல்வார் அனுமதிக்கப்பட்டாலும், ஸ்லீவ்லெஸ் குர்தா, சிகரெட் பேண்ட் மற்றும் பலேஸோ பேண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சீருடையில் இருக்கும்போது லிப்ஸ்டிக், கலர் நெயில் பாலிஷ், பிந்தி (பொட்டு) மற்றும் மூக்குத்தி அணியக் கூடாது என்றும், திருமணமான பெண்கள் வைக்கும் சிந்துரை (குங்குமம்) ராணுவத் தொப்பிக்கு வெளியே தெரியாதவாறு மறைத்து வைக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் அடுக்கப்பட்டுள்ளன.
இந்திய மதிப்புகளுக்கு ஏற்றவாறு ராணுவத்தின் அடையாளத்தை நவீனமயமாக்கும் இந்த அதிரடி மாற்றங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும், விமர்சனங்களும் கலந்து சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
