மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மாநில அரசியலிலும் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் சிலர், அடுத்தகட்டமாக பாஜகவில் இணைந்து தஞ்சம் புகலாம் என்று கணக்கு போட்டிருந்தனர். ஆனால், தற்போது அங்கு யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய ‘டிவிஸ்ட்’ அரங்கேறியுள்ளது. மம்தாவை எதிர்த்த அதிருப்தியாளர்களைத் தங்களது கட்சியில் சேர்த்துக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமை தற்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
பாஜகவின் இந்த திடீர் பின்வாங்கலால், மம்தாவை எதிர்த்த திரிணாமுல் தலைவர்கள் கடுமையான அரசியல் இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஒருபுறம் தங்களை வளர்த்துவிட்ட மம்தா பானர்ஜியையும், சொந்தக் கட்சியையும் பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டு வெளியே வந்தாச்சு; மறுபுறம் தங்களைக் கைகொடுத்துக் காப்பற்றும் என்று நம்பிய பாஜகவும் கதவை மூடி கைவிட்டுவிட்டது. இதனால் “இக்கரைக்கு அக்கரை பச்சை” என்று நினைத்து, இரண்டு பக்கமும் இல்லாமல் நடுவழியில் நிற்கும் அந்த அதிருப்தித் தலைவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதால், மேற்கு வங்க அரசியல் களம் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
