பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு ரோட்டோரப் பானிபூரி கடையில், மசாலா மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திற்குள் உயிருடன் எலி ஒன்று நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் பானிபூரி சாப்பிடச் சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலமும் அவரது நண்பரும், மசாலாவிற்குள் ஏதோ அசைவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடைக்காரர் அதை அகற்ற முயன்றபோது, அந்த எலி மசாலாவிலிருந்து குதித்து அருகிலிருந்த சாக்கடைக்குள் தப்பியோடியது. இந்த அருவருப்பான காட்சியை வீடியோவாகப் பதிவிட்ட அவர்கள், உடனடியாக அந்த மசாலாவைக் கொட்டச் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “தெருவோரக் உணவுகளில் சுகாதாரமே கிடையாது” என ஒரு தரப்பினர் கொதித்து வரும் நிலையில், சிலர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோவா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபகாலமாக மகாராஷ்டிராவில் பானிபூரி வண்டியில் பாம்பு புகுந்தது, அகமதாபாத்தில் பூச்சிகள் இருந்தது போன்ற செய்திகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அமிர்தசரஸில் நடந்த இந்தச் சம்பவம் பானிபூரி பிரியர்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
