மும்பை தகிசர் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி காலை வீட்டில் குழந்தையைக் காணாமல் பெற்றோர் தவித்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைப் போலீசார் பிடித்துள்ளனர். அந்த நபர் குழந்தையின் தந்தைக்குத் தெரிந்தவர் என்பதும், அதே பகுதியில் கூலி வேலை செய்பவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் தலையிட்டு, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். போலீசார் அந்த நபர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “எங்களுக்கு நீதி வேண்டும், என் மகளைத் தூக்கிச் சென்றவன் எங்களுக்குத் தெரிந்தவனே” என குழந்தையின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தக் கொடூரச் செயலுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், குற்றவாளிக்கு உச்சக்கட்ட தண்டனை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
