மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மக்களின் வாக்குகளை திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதற்கான 100 சதவீத ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அமலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, தேர்தல் ஆணையம் மக்களின் வாக்குகளை திருடுவதாக நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அதற்கான 100 சதவீத ஆதாரத்துடன் தான் நான் பேசுகிறேன். அந்த ஆதாரத்தை வெளியிட்டால் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளை திருடும் வேலை செய்வது இந்த நாட்டு மக்களுக்கு தெரிய வரும்.
மகாராஷ்டிரா தேர்தல் போது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. நாங்கள் ஆறு மாதங்கள் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினோம். அதில் எங்களுக்கு ஒரு பெரிய அணுகுண்டு கிடைத்தது. அந்த அணுகுண்டு வெடிக்கும் போது தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரிகள் முதல் கீழ் நிலையில் இருப்பவர்கள் வரை பாஜகவுக்கு யார் ஆதரவாக செயல்பட்டாலும் நாங்கள் அவர்களை விட மாட்டோம். இது தேச துரோகம் என கூறியுள்ளார்.
