இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்கா அடுத்தடுத்து நான்கு பெரும் அதிர்ச்சிகளை அளித்துள்ளது. ஈரான் உடனான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா முற்றிலும் புறக்கணித்ததுடன், அந்த ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலை வழங்கவும் மறுத்துவிட்டது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலை ஒரு பலவீனமான நாடு என்று விமர்சித்ததுடன், நெதன்யாகுவைச் சந்திப்பதற்கான நேரத்தையும் தற்காலிகமாக ஒதுக்க மறுத்துள்ளார். இறுதியாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவீருக்கு அமெரிக்கா சிறப்பு விசா வழங்க மறுத்ததும் இஸ்ரேலிய அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதனால் ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டாலும், தற்போது அமெரிக்கா இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியுள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அங்கு ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும் என்று நெதன்யாகு கொடுத்த வாக்குறுதி பொய்த்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதை ஆதரித்ததால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதத்தில் வரவிருக்கும் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலை அமெரிக்காவின் ஆதரவோடு சந்திக்கலாம் என்று நம்பியிருந்த நெதன்யாகுவிற்கு இது தற்பொழுது ஒரு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.