அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் மட்டும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 28 போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.

இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 12 ரீப்பர் ட்ரோன்களும், வரலாற்றிலேயே முதல்முறையாக அதீத தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 (F-35) ரக விமானமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருளாதார இழப்பும், பெரும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, குவைத்தில் நடந்த விபத்து மற்றும் ஈராக்கில் விமானம் நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அந்நாட்டிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானின் இந்தத் துணிச்சலான வான் பாதுகாப்புத் தாக்குதல்கள், அமெரிக்காவின் ராணுவ பலத்திற்கே சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.