இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரை, வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் புறக்கணிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐசிசி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக்கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி விலகிய வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கருத்துத் தெரிவித்துள்ள சூழலில், பாகிஸ்தான் இத்தொடரில் பங்கேற்காவிட்டால் அதன் மீது மிகக்கடுமையான நிதி மற்றும் கட்டமைப்பு ரீதியான தடைகளை விதிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கத் தடை விதித்தல், ஐசிசி வழங்கும் நிதிப்பகிர்வை ரத்து செய்தல், ஆசிய கோப்பைத் தொடரிலிருந்து பாகிஸ்தானை நீக்குதல் மற்றும் மற்ற நாடுகளுடனான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களைத் தடை செய்தல் போன்ற ‘இருத்தலியல்’ அச்சுறுத்தல்களை ஐசிசி முன்வைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, “பாகிஸ்தான் உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவைப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடு திரும்பியதும் அறிவிப்பார்; இது அரசாங்கத்தின் முடிவு, நாங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் தன்னிடம் ‘பிளான் ஏ, பி, சி மற்றும் டி’ எனப் பல மாற்றுத் திட்டங்களை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை ஐசிசி அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துள்ள நிலையில், பாகிஸ்தானும் இதே பாதையைப் பின்பற்றினால் உலக கிரிக்கெட் வரைபடத்திலிருந்து அந்த நாடு நிதி ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் தனிமைப்படுத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது.