சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு விலகும் பட்சத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு கடுமையான தடைகளைச் சந்திக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்துள்ளது.
அதாவது உலகக் கோப்பையிலிருந்து விலகினால், பாகிஸ்தான் அணி இனிவரும் காலங்களில் எந்தவொரு நாட்டுடனும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாட அனுமதி மறுக்கப்படும்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் விளையாட வெளிநாட்டு வீரர்களுக்குத் தேவையான ‘தடையுமில்லா சான்றிதழ்’ (NOC) வழங்கப்படாது. இதனால் பிஎஸ்எல் தொடரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.
உலகக் கோப்பையை புறக்கணிக்கும் பட்சத்தில், ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவும் பாகிஸ்தான் அணிக்குத் தடை விதிக்கப்படும் என ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தான் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்தே அந்நாட்டின் கிரிக்கெட் எதிர்காலம் அமையும் என்பதால், இந்த விவகாரம் தற்போது விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்னதாக இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டி20 உலக கோப்பை போட்டியிலிருந்து வங்கதேசம் அணி விலகிய நிலையில் அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி உலக கோப்பை போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
