ஐபிஎல் தொடரில் விளையாட வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர் கேகேஆர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் காட்டியது.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்கள் நாட்டுப் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஐசிசி (ICC) குழு நேரில் பேச்சுவார்த்தை நடத்தியும், இந்தியாவில் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏதுமில்லை என்று உறுதி அளித்தும் வங்கதேசம் தனது முடிவில் உறுதியாக இருந்தது.

24 மணி நேரத்திற்குள் முடிவெடுக்குமாறு ஐசிசி கொடுத்த கெடுவை வங்கதேசம் நிராகரித்த நிலையில், தற்போது அந்த அணி உலகக்கோப்பையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி குரூப் சி-யில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடம்பெற்றுள்ள பிரிவில் இனி ஸ்காட்லாந்து விளையாடும்.

வங்கதேசத்தின் இந்த பிடிவாதமான முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.