வங்கதேச அரசியல் களத்தில் தற்போது உற்றுநோக்கப்படும் முக்கிய நபராக தாரிக் ரஹ்மான் உருவெடுத்துள்ளார். இவர் வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா ஆகியோரின் மூத்த மகன் ஆவார். கடந்த 2001-2006 காலகட்டத்தில் தனது தாயின் ஆட்சியில் கட்சி மற்றும் அரசாங்கத்தில் நிழல் அதிகார மையமாகச் செயல்பட்டதால், இவர் “நிழல் இளவரசன்”என்று அழைக்கப்பட்டார்.
மேலும் ஊழல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக 2008-ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்ற அவர், சுமார் 17 ஆண்டுகள் அங்கு அரசியல் தஞ்சம் புகுந்திருந்தார். இக்காலகட்டத்தில் தனது தாயின் சிறைவாசத்திற்குப் பிறகு, லண்டனில் இருந்தபடியே வங்கதேச தேசியவாதக் கட்சியின் தற்காலிகத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் புரட்சிக்குப் பிறகு ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த நிலையில், 2025 டிசம்பர் மாதம் தாரிக் ரஹ்மான் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பினார். அவரது தாயார் கலீதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, 2026 ஜனவரி மாதம் கட்சியின் முழுநேரத் தலைவராகப் பொறுப்பேற்றார். சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 17 ஆண்டு கால நாடுகடத்தப்பட்ட வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அவர், தற்போது வங்கதேசத்தின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார். பழிவாங்கும் அரசியலைத் தவிர்த்து, நீதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான புதிய வங்கதேசத்தை உருவாக்குவதாக அவர் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.
