ஹாலிவுட் நடிகை பிஜோ பிலிப்ஸ் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக உயிருக்குப் போராடி வரும் நிலையில், தனது 11 வயது மகளுக்காக உயிர்வாழ விரும்புவதாக உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறக்கும் போதே சிறுநீரகக் குறைபாட்டுடன் பிறந்த 45 வயதான அவர், கடந்த 2017-ல் ஒரு நண்பரிடமிருந்து சிறுநீரகம் பெற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

எனினும், சமீபத்தில் தாக்கிய பி.கே வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த சிறுநீரகமும் தற்போது செயலிழந்துவிட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தீவிரமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தனது உடல்நிலை குறித்து அவர் விடுத்த உருக்கமான பதிவை ஏற்று, வெறும் 24 மணி நேரத்தில் சுமார் 1,000 பேர் சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்துள்ளனர். இருப்பினும், பிஜோ பிலிப்ஸிற்கு ‘பி’ நெகட்டிவ் ரத்த வகை என்பதால், அதே ரத்த வகை அல்லது ‘ஓ’ வகை கொண்ட பொருத்தமான நபரைத் தேடும் பணி சவாலாக உள்ளது.

இந்நிலையில் அவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தனியாக வசிக்கும் அவர், தனது மகளின் எதிர்காலத்திற்காக எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்ற துடிப்பில் பொருத்தமான கொடையாளருக்காகக் காத்திருக்கிறார்.