இங்கிலாந்தில் உள்ள நெட்வொர்க் ரயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரோவேனா ஓவன்ஸ் என்ற பெண், தனது ஆண் சக ஊழியர்களின் அநாகரீகமான செயல்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அந்த அலுவலகத்தில் இருந்த சுமார் 40 ஊழியர்களில் வெறும் 2 அல்லது 3 பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், ரோவேனாவை சக ஆண் ஊழியர்கள் ஒரு பெண்ணாக மதிக்காமல் மிக மோசமாக நடத்தியுள்ளனர். குறிப்பாக, அவர் அருகில் அமர்ந்து கொண்டு வேண்டுமென்றே சத்தமாக ஏப்பம் விடுவது, ஆபாசமான விஷயங்களைப் பேசுவது மற்றும் கணினி திரையில் ஆபாசப் படங்களை வைப்பது என வரம்பு மீறியுள்ளனர்.
ஒருமுறை ஒரு ஊழியர் சுமார் 15 நிமிடம் தொடர்ந்து ஏப்பம் விட்டு இம்சை செய்துள்ளார். இது குறித்து அவர் புகார் செய்தபோது, நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதனால் கொதிப்படைந்த ரோவேனா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையில் அவர் சுமார் 25 முறைக்கும் மேல் பாலின பாகுபாட்டிற்கு ஆளானது உறுதியானதை அடுத்து, அவருக்கு சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. வேலையை விட்டு தூக்கிய நிர்வாகத்திற்கு, கோர்ட் கொடுத்த இந்த ‘செக்’ இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
