கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் ஸ்கேனிங் மையத்தில் எம்ஆர்ஐ பரிசோதனைக்காக அளிக்கப்பட்ட ஊசி செலுத்தப்பட்ட பிறகு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அந்த மையத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவனுக்கு, பரிசோதனையின் போது அசையாமல் இருப்பதற்காக மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான மருத்துவக் கண்காணிப்பு இன்றி இந்த ஊசி செலுத்தப்பட்டதே சிறுவனின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த துயரமான சம்பவம் தொடர்பாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஸ்கேனிங் மையத்தின் அலட்சியமே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணம் என அவர்கள் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த தனியார் மையத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவத்துறையின் உயர்மட்டக் குழுவும் இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருவதால், கிரேட்டர் நொய்டா பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
