கிரேட்டர் நொய்டாவில் சமூக வலைதளப் புகழுக்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையில், அதிவேகமாகச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் காரின் மேற்கூரையில் ஒரு சிறுவன் படுத்திருப்பது போன்ற வீடியோ வைரலானது. காரின் பின் பக்க கண்ணாடியை ஒட்டி அந்தச் சிறுவன் எவ்வித பாதுகாப்புமின்றி படுத்திருக்க, டிரைவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை வேகமாகச் செலுத்துவது பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.



இந்த வீடியோ இணையதளங்களில் தீயாகப் பரவி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாகச் செயல்பட்ட போலீசார், காரை ஓட்டிய அங்கித் பால் என்பவரைக் கைது செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், லைக்ஸ் மற்றும் வியூஸ்கள் பெற வேண்டும் என்பதற்காகவே அந்தச் சிறுவனை வைத்து இந்த ஆபத்தான ஸ்டண்ட் செய்ததாகத் தெரியவந்துள்ளது. சிறுவனின் உயிரை ஆபத்தில் தள்ளியதற்காக அங்கித் பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.