நாளை நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்கள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த போராட்டத்தில், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், தமிழக அரசு தனது ஊழியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. “வேலைநிறுத்த நாளில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு ‘பணி இல்லை என்றால் ஊதியம் இல்லை’ என்ற விதிமுறைப்படி சம்பளம் பிடித்தம் செய்யப்படும்” என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும், மருத்துவ விடுப்பு தவிர மற்ற தற்செயல் விடுப்புகள் அனுமதிக்கப்படாது என்றும், அரசின் விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசிய பொதுச் சேவைகள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
