சென்னையில் தங்களது வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திப் போராடியவர்களுக்குத் தோள் கொடுக்கச் சென்ற இடத்தில் இந்த அதிரடி கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
போராட்டக் களத்தில் சீமான் பேசிய ஆவேசமான பேச்சுக்கள் அங்கிருந்தவர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதாக அரசு மீது குற்றம் சாட்டி வரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகள் வரிசையாகக் களமிறங்கி வருகின்றன. அந்த வகையில் சீமானின் இந்த வருகை போராட்டத்திற்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.
ஆனால், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி போலீசார் அவர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. “மக்களுக்காகப் போராடினால் கைது செய்வீர்களா?” என நாம் தமிழர் கட்சியினர் எழுப்பிய முழக்கங்களால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த கைதைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் சீமானின் ஆதரவாளர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
