டெல்லியைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளரான பி. ராதா காயத்ரி, தனது கணவர் சௌமியா ஸ்ரீசரனுடன் முசோரிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு ஹோம்ஸ்டே அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவர்களுக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்டு ரிஷிகேஷ் வழியாக ஜூன் 14 அன்று இரவு முசோரி வந்தடைந்த தம்பதியினர், விடுதி அறையில் தங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை வேளையில் காயத்ரி மயக்க நிலையில் இருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அங்கு வந்த போலீசார், காயத்ரி ஆடைகளின்றி தரையில் இறந்து கிடப்பதையும், படுக்கை விரிப்பில் இரத்தக் கறைகள் இருப்பதையும் கண்டறிந்தனர். மேலும் அந்த அறையிலிருந்து இரண்டு காலி மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரது கணவர் ஸ்ரீசரனிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாங்கள் இருவரும் இரவில் மது அருந்திவிட்டு அதிகாலை 3:30 மணியளவில் தூங்கச் சென்றதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது தனது மனைவி மூக்கில் இரத்தக் கசிவுடன் மயங்கிக் கிடந்ததாகக் கூறியுள்ளார்.

எனினும், காயத்ரியின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என்ற அனைத்து கோணங்களிலும் முசோரி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.