இந்தியாவில் இனி மருத்துவர்களின் முறையான பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் இருமல் மருந்து உள்ளிட்ட எந்தவொரு சிரப் வகைகளையும் மருந்தகங்களில் நேரடியாக வாங்க முடியாது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தரமற்ற இருமல் மருந்துகளைக் குடித்த குழந்தைகள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.

இதன் காரணமாக இருமல் மருந்துகளின் தரம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு ஐயங்களும், அடுக்கடுக்கான புகார்களும் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. ​நடப்பு 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு வெளியிட்ட மருத்துவ நிபுணர்களுக்கான வழிகாட்டி கையேடு வரைவில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது ‘மருந்துகள் விதி 1945’-ல் அதிரடி திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களுக்கு மருத்துவர் பரிந்துரை இன்றி எளிதாகக் கிடைக்கக்கூடிய மருந்துப் பட்டியலான ‘அட்டவணை K’ (Schedule K)-யில் இருந்து இருமல் மருந்து உள்ளிட்ட அனைத்து வகையான சிரப்புகளையும் மத்திய அரசு முழுமையாக நீக்கியுள்ளது. இதன் காரணமாக, இனி எந்தவொரு சிரப்பையும் பொதுமக்கள் தன்னிச்சையாக மருந்தகங்களில் ஓடிச் சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.