அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹோர்முஸ் நீரிணை’ பகுதியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
மேலும் போர்க்காலத்தில் அமெரிக்க கடற்படையின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக, ஈரான் இந்த கடல் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ‘மஹாம்-3’ ரக நீருக்கடியிலான கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளது. இதில் ஒரு கண்ணிவெடியில் மட்டுமே சுமார் 340 கிலோ வெடிபொருட்கள் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த கடல் பகுதியின் ஒவ்வொரு மீட்டருக்கும் தலா ஒரு கிலோ வெடிபொருள் வீதம் மொத்தம் 34,000 கிலோ வெடிபொருட்கள் கடலுக்கு அடியில் பரப்பப்பட்டுள்ளன. உலகளாவிய எரிசக்தி தேவையில் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்த 34 கிலோமீட்டர் அகலமுள்ள கடல் வழித்தடத்தின் மூலமாகவே நடப்பதால், இதனைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த அபாயகரமான கண்ணிவெடிகளை அகற்றி, கடல் வழியை முழுமையாகப் பாதுகாப்பான போக்குவரத்திற்கு கொண்டு வர குறைந்தபட்சம் 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று நிபுணர்களும் பென்டகனும் கருதுகின்றனர்.
இந்த தூய்மைப்படுத்தும் பணியில் ஈரான் அரசுக்கு உதவ பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களின் சிறப்பு மைன்-ஸ்வீப்பர் கப்பல்களை சைப்ரஸ் நோக்கி அனுப்பியுள்ளன. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் இந்த வழித்தடத்தை உடனடியாகத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதோடு, இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
