சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோவில், ஒரு பச்சைத் தவளை தனக்கு இரையாகக் கிடைத்த பூரான் ஒன்றை வேட்டையாடி முழுதாக விழுங்குகிறது. ஆனால், தவளை விழுங்கிய அந்தப் பூரான் சாதாரணமான ஒன்று அல்ல, அது ஒளிரும் தன்மை கொண்ட ஒரு பூரான் ஆகும்.

இதனால் தவளையின் வயிற்றுக்குள் சென்ற பிறகும் அந்தப் பூரான் உயிருடன் நகர்ந்து கொண்டு, தொடர்ந்து ஒளியை உமிழ்ந்துள்ளது. தவளையின் தோல் பகுதி மிகவும் மெல்லியதாகவும், ஓரளவிற்கு ஊடுருவும் தன்மையுடனும் இருந்ததால், அந்தப் பூரானின் வெளிச்சம் தவளையின் வயிற்றுப் பகுதியிலிருந்து வெளியே பிரகாசமாகத் தெரிந்துள்ளது.

“>

அதோடு பூரானை விழுங்கிய தவளை, அதன் வயிற்றுக்குள் வெளிச்சம் எரிவதால் ஒரு நடமாடும் டார்ச் லைட் போல காட்சியளித்தது. இந்த விசித்திரமான காட்சியைக் கண்ட நெட்டிசன்கள், “இனி தவளைக்கு டார்ச் லைட்டே தேவையில்லை”, “பூரான் தன் மரணத்திற்குப் பிறகும் பழிவாங்கிவிட்டது” எனப் பலவாறாக வேடிக்கையாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இயற்கையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனித்துவமான தற்காப்புத் திறன் உள்ளது என்பதையும், வேட்டையாடும் விலங்குகளும் சில நேரங்களில் இதுபோன்ற தவறான இரையைத் தேர்ந்தெடுத்து அவதிப்படும் என்பதையும் இந்த வீடியோ காட்டுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.