உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்தும், கடுமையாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் நடந்த இரு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை போலீசார் செப்டம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். புறக்காவல் நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கியதில் அவரது இரு விரல்கள் உடைந்தன.

மேலும், குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் போலி என்கவுன்டரில் கொன்றுவிடுவோம் என மிரட்டியதோடு, அவரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த அத்துமீறல் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் தரப்பில் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, காவல்துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காப்திஹா கலான் புறக்காவல் நிலைய ஆய்வாளர் ஹரிசரண் சிங் மற்றும் போலீசார் ராம்ரூப், பையா, பங்கஜ், ஜுவாலா, வித்யாத்ர், சுனில் ஆகிய 7 பேர் மீது பைலானி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.