தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், காந்தி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி போன்ற தலைவர்களைப் போல மக்களுடன் மக்களாகச் சாலையில் நடந்து சென்று அவர்களைச் சந்திக்கவே ஆசைப்படுகிறார் என்ற ரகசியத்தை ஆதவ் அர்ஜுனா உடைத்துள்ளார். ஆனால், விஜய்யின் வருகைக்காகக் கூடும் பிரம்மாண்டமான கூட்டமே அதற்குப் பெரும் தடையாக மாறியுள்ளது. முதல் முதலில் மதுரையில் நடந்த மாநாட்டிற்கு 550 ஏக்கர் நிலம் தேவைப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் பேர் திரண்டது அரசியல் களத்தையே அதிர வைத்தது.

​மாவட்ட ரீதியாக மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டாலும், வெறும் 3 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே பல மணிநேரங்கள் ஆகிறது. விஜய்யின் வாகனம் நகர முடியாமல் முடங்குவதும், அதற்குப் போதிய பாதுகாப்பு வழங்கக் காவல்துறை ஒத்துழைப்பு தராததும் பெரும் சவாலாக உள்ளது. “வாகனத்திலேயே செல்ல முடியாத அளவுக்குக் கூட்டம் அலைமோதும் நிலையில், விஜய் எப்படி மக்களுடன் சாலையில் நடந்து செல்ல முடியும்?” என ஆதவ் அர்ஜுனா விகடன் மேடையில் கேள்வி எழுப்பியுள்ளது இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.