அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆக வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம். ஆனால், அங்குள்ள மருத்துவச் செலவுகளைக் கேட்டால் அந்த கனவே கலைந்துவிடும் போலிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேஸ் ஸ்பால்டிங் என்ற பெண், தனது குழந்தை பிறப்பிற்கு வந்த மருத்துவப் பில்லை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்துள்ளார்.

அவருக்கு ‘நார்மல் டெலிவரி’ (சாதாரணப் பிரசவம்) தான் நடந்துள்ளது, அதுவும் வெறும் இரண்டு மணிநேரத்தில் பிரசவம் முடிந்துவிட்டது. ஆனாலும், அவருக்கு வந்த மருத்துவப் பில் பல லட்சங்களைத் தாண்டியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Jess Spaulding (@jess_spaulding)

மருத்துவக் காப்பீடு (Insurance) இருந்தபோதிலும், தனது கைக்காசிலிருந்து மட்டும் சுமார் 16,000 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 13 முதல் 15 லட்சம் ரூபாய்) அவர் கட்ட வேண்டியிருந்தது.

பிரசவ அறை கட்டணம், மருத்துவர் கட்டணம், மயக்க மருந்து என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பில்கள் மாதக்கணக்கில் வந்துகொண்டே இருப்பதாக அவர் குமுறியுள்ளார்.

இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் சில லட்சங்களிலும் முடிந்துவிடும் இந்தச் செலவு, அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினரைக் கடனாளியாக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

“இந்த பில்கள் வருவது எப்போதுதான் நிற்கும்?” என அவர் வேதனையுடன் கேட்ட கேள்விக்கு, பல அமெரிக்கத் தாய்மார்களும் தங்களது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் சிக்கலான மருத்துவக் கட்டண முறையே இந்த நிலைக்குக் காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.