அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 39 நாட்களாக நீடித்து வந்த போர், 40-ஆவது நாளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போரில் ஈரானுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்கப் படைகளுக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த 39 நாள் போரில் அமெரிக்காவின் 39 விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 10 விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்கப் படைகள் தங்களது இலக்குகளைத் தாக்க சுமார் 13,000 முறை போர் விமானங்களை இயக்கியுள்ளன . இதற்காக அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டுள்ளது.
அமெரிக்கா சந்தித்துள்ள ஒட்டுமொத்த இழப்பில் 60 சதவீதம் ட்ரோன் (Drone) படைகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் மிகவும் அதிநவீனமான 24 MQ-9A ரீப்பர் (Reaper) ரக ட்ரோன்கள் ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் வான்வழித் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறனுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
போர்நிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் அமெரிக்காவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் MQ-4C ட்ரைடன் ரக ட்ரோன் திடீரென மாயமாகியுள்ளது. இந்த ஒரே ஒரு ட்ரோனின் மதிப்பு மட்டும் சுமார் 200 மில்லியன் டாலர் (சுமார் ₹1,600 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரோன்கள் மட்டுமன்றி, அமெரிக்காவின் 5 சக்திவாய்ந்த போர் விமானங்களையும் ஈரான் வீழ்த்தியுள்ளது. இதில் நான்கு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) போர் விமானங்களும், ஒரு A-10 வார்தாக் (Warthog) ரக விமானமும் அடங்கும். இது தவிர, அமெரிக்காவின் பல ராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான தகவல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சந்தித்துள்ள மொத்த இழப்புகளில் 20 சதவீதம் ‘பிரண்ட்லி ஃபயர்’ (Friendly Fire) எனப்படும் தங்களுக்குள்ளேயே தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
